ஒரு நாட்டிற்குரிய தகைமை பெற்ற சகல பிரஜைக்கும் இனம், மதம், மொழி, சாதி, குலம், கல்வி, சொத்துரிமை, பிறப்பு, பிறப்பிடம், ஆண், பெண் ஆகிய எதுவித பேதங்களும் அற்ற வகையில் நாட்டின் அதிகார நிருவாகத்தில் பங்கேற்கும் உரிமையும், அத்துடன் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கான உரிமையும் கொண்டதுவே சர்வஜன வாக்குரிமையாகும்.
சர்வஜன வாக்குரிமையின் மூலம், மக்கள் இறைமை பாதுகாக்கப்படுவதற்கான அதிகாரம் மக்களுக்கு உரித்தாகின்றது. மற்றொரு வகையில் கூறுவதானால், தனக்காகவும், நாட்டிற்காகவும் தீர்மானத்தை எடுக்கக்கூடிய முக்கிய பொறுப்பு மக்களுடையதாகின்றது. மன்னர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாக மன்னர் மாத்திரமே முக்கிய தீர்ப்பாளராக விளங்கினார். மன்னர் ஆட்சியை மாற்றியமைத்து ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையில் குடியரசுகள் உருவாகுவதற்கான மூலகாரணமாக அமைந்தது இந்த சர்வஜன வாக்குரிமை முறையாகும். மக்கள் அரசாட்சியில் பங்குபற்றும் வாய்ப்புக்கள் இந்த சர்வஜன வாக்குரிமை மூலம் பெறப்பட்டது.