தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

வாக்கெண்ணல்

வாக்கெடுப்புத் தினத்தன்று அந்தந்த வாக்கெண்ணல் நிலையங்களுக்குரிய வாக்கெடுப்பு மாவட்டங்களிலிருந்து உரிய வாக்குப் பெட்டிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் சாதாரணமாக  இரவு 7.00 மணியளவில் வாக்கெண்ணல் ஆரம்பிக்கப்படும். ஓர் அரசியற் கட்சியிலிருந்து அல்லது சுயேச்சைக் குழுவொன்றிலிருந்து ஐந்து வாக்கெண்ணல் முகவர்களை இவ்வாறான வாக்கெண்ணல் நிலையமொன்றிற்கு நியமனம் செய்யமுடியும். அஞ்சல் வாக்கெண்ணலுக்காக   ஒரு கட்சியின் / குழுவின் இரண்டு முகவர்கள் வீதம் கலந்துகொள்ளச் செய்யமுடியும். அஞ்சல் வாக்கெண்ணல் வாக்கெடுப்புத் தினம் பி.ப 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்படும். வாக்குப் பெட்டிகளை கையேற்கும் அலுவல்களை கண்காணிப்பதற்காக வாக்கெண்ணல் முகவர்களிலிருந்து ஒருவருக்கு தேர்தல் தினத்தன்று பி.ப 3.00 மணிக்கு வாக்கெண்ணல் மண்டபத்திற்கு சமூகமளித்திருக்க முடியும்.

முழு நாடும் ஒரு தேர்தல் மாவட்டமொன்றாக சனாதிபதித் தேர்தல், மக்கள் தீர்ப்பு ஆகியவை தவிர்ந்த ஏனைய தேர்தல்களின் போது முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும். முதலாவதாக அஞ்சல் வாக்கு முடிவுகளையும் உள்ளடக்கி வாக்கெடுப்புப் பிரிவு மற்றும் மாவட்ட மட்டத்தில் வாக்கெண்ணல் முடிவுகளும் மற்றும் இரண்டாவதாக ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் முடிவுகளும் என்றவாறாகும். இவ்வனைத்து சந்தர்ப்பங்களின் போதும் ஒரு வாக்கெடுப்புப் பிரிவு (முன்னைய பாராளுமன்ற தேர்தல் தொகுதி) மற்றும் இறுதியில் தேர்தல் மாவட்டத்தின் முடிவு வெளியிடப்படும். முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னர் தெரிவத்தாட்சி அலுவலர்அதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் தனக்குக் கீழ் பணியாற்றுகின்ற பணியாளர்களின் ஒத்துழைப்போடு குறித்த தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர்கள் (மாவட்ட செயலாளர்கள்) தேர்தல் நடாத்துதல் மற்றும் வாக்கெண்ணல் பணிகளை நிருவகிப்பார்கள்.

அஞ்சல் வாக்குகள் மற்றும் விருப்புவாக்குகள் எண்ணல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றின் ஒவ்வொரு வாக்கெண்ணல் நிலையங்களும் பதிவு செய்யப்பட்ட 10,000 க்கு கிட்டிய வாக்காளர்களைக் கொண்டதாக இருக்கும். நிலையமொன்றில் வாக்கெண்ணல் ஆரம்பிக்கப்படுவது அந்நிலையத்திற்குரிய வாக்குப் பெட்டிகள் இறுதி வாக்குப் பெட்டி மற்றும் வாக்கெடுப்பு நிலைய குழப்பங்கள் தொடர்பான பரிசீலனை அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னராகும். எவ்வாறெனினும் வாக்கெண்ணல் நிலையங்களில் வாக்கெண்ணலை ஆரம்பிப்பதற்கு முன்னர்தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து அதற்காக முன்னனுமதியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும். குழப்பங்கள் இடம்பெற்ற வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்கெடுப்பை வறிதாக்குவதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் உள்ளதால் இது முக்கியமாகும். பி.ப 4.00 மணியின் பின்னர் அஞ்சல் வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும்.

வாக்கெண்ணல் மண்டபத்தின் தலைவர், தலைமை வாக்கெண்ணல் அலுவலர் (CCO)என அழைக்கப்படுவார். அவர் அரச சிரேட்ட பதவி நிலை அலுவலரொருவராக இருக்கவேண்டுமென்பதோடு சமமான முகாமைத்துவ சேவைகளின் முதலாம் வகுப்பு அல்லது விசேட வகுப்பு அலுவலர்கள் இப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவர். தலைமை வாக்கெண்ணல் அலுவலருக்கு உதவுவதற்காக பதவி நிலை அலுவலர்கள் அல்லது உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் 06 பேர் ஈடுபடுத்தப்படுவதோடு, அரச ஊழியர்கள் 20-30 இடையிலான பணிக்குழுவினரும் ஈடுபடுத்தப்படுவர். அவர்கள் வெவ்வேறு அலுவலகங்கள் / பாடசாலைகளில் பணியாற்றுகின்ற வெவ்வேறு தொழில்களில் ஈடுபடுவோர்களாவர்

 

வாக்கெண்ணல்  ஒழுங்கை மூன்று கட்டங்களாக வகைப்படுத்த முடியும்.

கட்டம் I - ஒவ்வொரு வாக்குப் பெட்டியிலும் உள்ள வாக்குச் சீட்டுக்களின் எண்ணிக்கையை எண்ணி  அவற்றை பெட்டிக்கு மாற்றுதல்.
கட்டம் II - வாக்குகளை எண்ணல் தேர்தல் மாவட்டத்தின் ஒவ்வொரு கட்சியும், குழுவும் பெற்றுக் கொண்டவாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான கூற்றைத் தயாரித்தல்.
கட்டம் III - ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை ஒப்புநோக்கல்படிவம் / பொழிப்புப் படிவங்களில் அடையாளமிடலுக்கிணங்க தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக் கொண்ட மொத்த விருப்புக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்.

 

கட்டம் I

(அ). ஒவ்வொரு பெட்டியிலுமுள்ள வாக்குச் சீட்டுக்களை எண்ணல் மற்றும் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலரினால் கையளிக்கப்பட்டுள்ள வாக்குச் (சீட்டு கணக்கு) வாக்குச் சீட்டு விபர எண்ணிக்கையோடு அதனை ஒப்பு நோக்குதல், இக்கணக்கின் பிரதியொன்று வாக்கெடுப்பு நிலையத்தில் கட்சி முகவர்களுக்கு வழங்கப்படுவதோடு ஏதேனும்பெட்டியொன்றிலுள்ள வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் வாகுச் சீட்டுக் கணக்கின் தொகையில்  வேறுபாடொன்று காணப்படுமாயின் மீண்டும் எண்ணப்படுவதோடு, பல தடவைகள் எண்ணப்பட்ட பின்னரும் வேறுபாடொன்று காணப்படுமாயின் பெட்டியில் உள்ள எண்ணிக்கை சரியானதெனக் கருதி ஏனைய அலுவல்கள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னரும் வேறுபாடு காணப்படுமாயின் அதிகம் அல்லது குறைவு அதனைக் குறித்துக் கொண்டு வாக்கெண்ணலை நிறைவு செய்தல் வேண்டும்.

(ஆ). பெட்டியிலுள்ள வாக்குச் சீட்டுக்களை எண்ணி வாக்குச் சீட்டு விபரத்தில் காட்டப்பட்டுள்ள எண்ணிக்கையோடு, ஒப்புநோக்கல் வேண்டும். அதன் பின்னர், குறித்த விபரங்களுடன் அதனை உரிய படிவத்தில் குறித்துக் கொள்ளல் வேண்டும். இச்செயல்முறையை அனைத்து வாக்குப் பெட்டிகளும் எண்ணி முடிக்கப்படும் வரை மேற்கொள்ளல் வேண்டும்.

 

கட்டம் II

(அ). கட்டம் II  இரண்டு உப கட்டங்களாகப் பிரிக்கப்படும்.

1 ஆம் உப கட்டத்தின் கீழ் அனைத்து பணிக்குழுவினரையும் ஈடுபடுத்தி தட்டிலுள்ள வாக்குச் சீட்டுக்களை மேசையின் மீது வைத்து கட்சிகள்/ குழுக்கள் என தெரிவுசெய்யப்படும். இங்கு அடையாளமிடப்படாத அல்லது நிச்சயமற்ற வாக்குச் சீட்டுக்கள் தனியாகத் தெரிவு செய்யப்படுவதோடு நிச்சயமற்ற வாக்குச் சீட்டுக்கள் தொடர்பாக தலைமை வாக்கெண்ணல் அலுவலர் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

2 ஆம் உப கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சிக்கு/ குழுவிற்குரிய வாக்குச் சீட்டுக்கள் மீண்டும், மேலே காட்டப்பட்டுள்ளவாறு மீண்டும் தெரிவு செய்து கணக்கிடப்படும்

தெரிவு செய்தல்  -     ஒரே கட்சிக்கு/ குழுவிற்கமைய முதலாம் உப கட்டத்தில் தெரியப்பட்ட வாக்குச் சீட்டுக்களின் பிழையற்ற தன்மையை பரிசீலித்தல்.

வாக்கெண்ணல் - ஒரே கட்சிக்கு/குழுக்களுக்குரிய வாக்குச் சீட்டுக்களை வெவ்வேறாக எண்ணி 50 கொண்டகட்டுக்களாகக் கட்டுதல்.

பரிசீலித்தல் - ஒரே கட்சிக்கு/குழுவிற்குரியதாவென்பதையும் மற்றும் 50 வாக்குச் சீட்டுக்கள் உள்ளதாவென்பதையும் பரிசீலித்தல்.

மீள் பரிசீலனை   - ஒரே கட்சிக்கு/குழுவிற்குரியதாவென்பதையும் மற்றும் 50 வாக்குச் சீட்டுக்கள்உள்ளதாவென்பதையும் பரிசீலித்தல்.

சிறப்புப் பரிசீலனை (எழுமாற்றுப் பரிசீலனை)  -   மீளப் பரிசீலிக்கப்பட்ட 50 வாக்குச் சீட்டுக்களைக் கொண்ட 10 கட்டுக்களைக் கொண்டு 500 கொண்ட கட்டுக்களாகக் கட்டப்படுவதோடு, தலைமை வாக்கெண்ணல் அலுவலர்/ உதவித் தெரிவத்தாட்சி அலுவலரினால் எழுமாற்றாக 50 கொண்ட வாக்குச் சீட்டுக் கட்டுக்கள் சிலவற்றையெடுத்து கட்சி / குழு சரியானதாவெனவும் 50 வாக்குச் சீட்டுக்கள் உள்ளதாவெனவும் செய்கின்ற பரிசீலனையாகும். 50 வாக்குச் சீட்டுக்களைக் கொண்ட 10 கட்டுக்களை ஒன்று சேர்த்து 500 கொண்ட கட்டுக்களாக கட்டி இறப்பர் வார் இட்டு கட்சி / குழுக்களுக்கமைய தட்டுக்களில் இடப்படும்.

(ஆ). ஒவ்வொரு கட்சிக்கும், குழுவிற்கும் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளுக்கிணங்க வாக்குச் சீட்டுக்கள் தெரியப்பட வேண்டும். எவையேனும் ஐயப்பாட்டிற்குரிய வாக்குச் சீட்டொன்று காணப்படுமாயின், அதன் செல்லுபடியான தன்மையை தீர்மானிப்பதற்கு தலைமை வாக்கெண்ணல் அலுவலருக்கு ஒப்படைத்தல் வேண்டும். வாக்கெண்ணல் நிறைவடையும் வரை காத்திராது அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே ஐயப்பாடுடைய வாக்குச் சீட்டுக்கள் தொடர்பான அவர்களின் முடிவினை கட்சி முகவர்களை அறிவுறுத்துமாறு தலைமை வாக்கெண்ணல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. செல்லுபடியான வாக்குச் சீட்டுக்களை 50 கொண்ட கட்டுக்களாகக் கட்டி அதன் பின்னர், அவ்வாக்குச் சீட்டுக்களை 500 கொண்ட கட்டுக்களாகக் கட்டி தலைமை வாக்கெண்ணல் அலுவலரின் மேசையின் மீதுள்ள ஒவ்வொரு கட்சிக்குரிய / குழுவிற்குரிய பெட்டியில் அல்லது தட்டில் இடப்படும். இக்கட்டம் நிறைவடைந்ததன் பின்னர், தலைமை வாக்கெண்ணல் அலுவலரால் ஒவ்வொரு கட்சி / குழு பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான கூற்று தயாரிக்கப்படும்.

(இ). இக்கட்டத்தின் போது பெறுபேறு தொடர்பாக திருப்தியடையாத வாக்கெண்ணல் முகவர்களுக்கு மீள் வாக்கெண்ணலொன்றை கோர முடியுமென்பதோடு, கட்சி / குழுவின் முகவரின் கோரிக்கை மீது மீள் வாக்கெண்ணல் உயர்ந்த பட்சமாக இரண்டு தடவைகளாகும் தேவையெனக் கருதுமிடத்து முகவர்களின் கோரிக்கையொன்றின்றியும் தலைமை வாக்கெண்ணல் அலுவலர் மீள் வாக்கெண்ணலை மேற்கொள்ள முடியும்

(ஈ). வாக்கெண்ணல் மண்டபத்திலிருந்து ஒவ்வொரு கட்சிக்குரிய / குழுவுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை உள்ளடக்கப்பட்ட கூற்றுக் கிடைக்கப்பெற்றதன் பின்னர், தெரிவத்தாட்சி அலுவலரால் முழு மாவட்டத்திற்குமாக அந்தந்த கட்சிகள் / குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் தொடர்பான இறுதி கூற்று தயாரிக்கப்படுவதோடு, அக்கூற்றினை அடிப்படையாகக் கொண்டு போட்டியிட்ட கட்சிகள் / குழுக்களிலிருந்து அம்மாவட்டத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டிய எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்

 

கட்டம் III

(அ). இக்கட்டத்தின் போது வேட்பாளர்களுக்காக அடையாளமிடப்பட்டுள்ள விருப்புக்கள் எண்ணப்படும். இக்கட்டம் ஆரம்பிக்கப்படும் போது கட்சிகள் / குழுக்களுக்கு 50 மற்றும் 500 கொண்ட கட்டுக்களாக வாக்குச் சீட்டுக்கள் உரிய தட்டுக்களில் வைக்கப்பட்டிருக்கும்

(ஆ). வாக்கெண்ணல் நிலையத்தில் அந்தந்த கட்சிகள் / குழுக்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அதிக எண்ணிக்கையான வாக்குகளை பெற்றுக் கொண்ட கட்சி / குழுக்களின் வாக்குச் சீட்டுக்களை எண்ணுவதிலிருந்து விருப்பெண்ணல் ஆரம்பிக்கப்படும். விருப்பெண்ணலுக்கு செல்லுபடியாகாத வாக்குச் சீட்டுக்களை தெரிவதற்காக விருப்பெண்ணல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இவ்வாக்குச் சீட்டுக்கள் மீள் தெரியப்படல் வேண்டும். விருப்பு செல்லுபடியாகாத வாக்குச் சீட்டுக்களாக,

  1. விருப்பு அடையாளமிடப்படாத - No P
  2. மூன்று வேட்பாளர்களை விட அதிகமானோருக்கு விருப்பு அடையாளமிடப்பட்டுள்ள மற்றும் - P3+
  3. விருப்பு நிச்சயமற்றதால் நிராகரிக்கப்படும் வாக்குச் சீட்டுக்கள் உள்ளடங்கும். - P Void.

விருப்பு செல்லுபடியாகும் வாக்குச் சீட்டுக்கள் பின்வருமாறு வகைகளில் வகைப்படுத்தப்படும்.

  1. செல்லுபடியான விருப்பொன்றை மாத்திரம் கொண்டுள்ள வாக்குச் சீட்டுக்கள் - P - 1
  2. செல்லுபடியான இரண்டு விருப்புக்களை மாத்திரம் கொண்டுள்ள வாக்குச் சீட்டுக்கள்  - P - 2
  3. செல்லுபடியான மூன்று விருப்புக்களை மாத்திரம் கொண்டுள்ள வாக்குச் சீட்டுக்கள்  - P - 3

(இ). விருப்புச் செல்லுபடியான வாக்குச் சீட்டுக்களை எண்ணி மீண்டும் 50 கொண்ட கட்டுக்களாகக் கட்டி இறப்பர் வார், கடதாசியால் சுற்றி, கிளிப் இடுதல் வேண்டும். ஒரு ஒப்புநோக்கு அலுவலரினால் 50 கொண்ட கட்டொன்றிலுள்ள அனைத்து வாக்குச் சீட்டுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக் கொண்ட விருப்புக்களின் எண்ணிக்கையை ஒப்புநோக்குப் படிவத்தில் ஒவ்வொரு வேட்பாளருக்குமுரிய கூட்டினுள் அடையாளமிடல் வேண்டும். இவ்வடையாளம் நீல நிறப் பேனாவினால் இடுதல் வேண்டும்

(ஈ). வாக்குச் சீட்டுக்கள் 50 கொண்ட கட்டொன்றுக்குரிய விருப்புக்கள் குறிக்கப்பட்டு நிறைவடைந்ததன் பின்னர், அவ்வனைத்து குறிப்புக்களும் சரியானதாவென பரிசீலிக்கும் பொருட்டு மேசையின் எதிர்திசையிலுள்ள அலுவலர்ஒருவருக்கு அதனை பெற்றுக் கொடுத்தல் வேண்டும். அவ்வலுவலர் சிவப்பு நிற பேனாவொன்றைப் பயன்படுத்த வேண்டுமென்பதோடு, அவர் பரீட்சித்தமையை உறுதிப்படுத்துவதற்காக உட்சேர்க்கப்பட்டுள்ளவற்றை அடையாளமிடல் வேண்டும். தயாரிக்கப்பட்டது, பரிசீலிக்கப்பட்டதென உரிய அலுவலர்கள் தமது பெயரையும் கையொப்பத்தையும் படிவத்தில் இடுதல் வேண்டும்.

(உ). இச்செவ்வை பார்த்தலின் இறுதியில் ஒவ்வொரு பொழிப்புப் பத்திரத்தின் கூட்டுத்தொகையும் முதலாம் பொழிப்புப் பத்திரத்தில் உட்சேர்த்து மீண்டும் கூட்டும் மேசையின் அடுத்த கட்டத்திற்கு பொழிப்புப் பத்திரத்துடன் இக்கட்டுக்கள் அனுப்பப்படும். குறிப்புக்களையிடும் அலுவலர் தனது பெயரையும் கையொப்பத்தையும் குறித்த படிவத்தில் இடுதல் வேண்டும்.

(ஊ).இம்முதலாவது பொழிப்புப் பத்திரங்களின் கூட்டுத்தொகையை இரண்டாம் பொழிப்புப் பத்திரத்தில் பதிவதற்காக மேசையின் அடுத்த கட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பொழிப்புப் பத்திரங்கள் இரண்டிற்கும் அமைய ஒவ்வொரு வேட்பாளரும் பெற்றுக் கொண்ட விருப்புக்களின் கூட்டுத்தொகை அவ்வாக்கெண்ணல் நிலையத்தின் விருப்புகளின் இறுதி கூட்டுத்தொகையாகும். ஒவ்வொரு கட்சி / குழு சார்பாக இரண்டாம் பொழிப்புப் பத்திரம் பூரணப்படுத்தப்பட்டு நிறைவடைந்ததன் பின்னர், வாக்கெண்ணல் அலுவலரினால் தமது கையொப்பத்தையும் மற்றும் சாட்சியாக மேலுமொரு உதவித் தெரிவத்தாட்சி அலுவலரின் கையொப்பத்தையும் இட்டு உரிய உறையிலிட்டு பொறியிட்டு தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு கட்சியும் குழுவும் பெற்றுக் கொண்ட விருப்புக்களின் எண்ணிக்கையை தனித்தனியாகத் தயாரித்து தெரிவத்தாட்சி அலுவலருக்கு கையளிக்கப்படும் வரை இப்பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இக்கட்டத்தின் இறுதியில் வாக்கெண்ணல் நிலையத்தின் வாக்கு மற்றும் விருப்புக்கள் எண்ணல் நிறைவுக்கு வரும்.

(எ). ஒவ்வொரு வாக்கெண்ணல் நிலையத்தினதும் விருப்புக்கள் தொடர்பான கூற்றுக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் தெரிவத்தாட்சி அலுவலரினால் ஒவ்வொரு வேட்பாளரும் மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட விருப்புக்கள் தொடர்பான இறுதிக் கூற்று தயாரிக்கப்படும்.

தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் முடிவுகள் பிரிவு மட்டத்தில் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்படும். அனைத்து தேர்தல்கள் மற்றும் மக்கள் தீர்ப்பு என்பவற்றின் போது வானொலி, தொலைக்காட்சி ஊடாக தேசிய அடிப்படையில் முடிவுகளை வெளியிடுவது  இராஜகிரியவில் அமையப்பெற்றுள்ள தேர்தல்கள் செயலகத்தில் வைத்து மேற்கொள்ளப்படும்.