2020 ஒக்டோபர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழு தொடர்பாகவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திருத்த்த்தின் மூலம் அரசியலமைப்புச் சபை இல்லாதொழிக்கப்பட்டதுடன் தேர்தல் ஆணைக்குழுவை நியமிக்கும்போது பாராளுமன்ற சபையின் சிபார்சுகளைப் பெற்றுக்கொண்டு சனாதிபதியினால் நியமிக்கப்பட வேண்டுமென்ற ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டது. அதேபோல் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 இலிருந்து 5 வரை அதிகரிக்கப்பட்டது. அதேபோல் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த தேர்தல் காலத்தில் அரச ஆதனங்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்வதைத் தடுப்பதற்கான தத்துவங்களுக்குப் புறம்பாக, வாக்கெடுப்பு காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற ஊடக வழிகாட்டுநெறிகளைப் பின்பற்றி ஒழுகுவது குறித்து அரச ஊடகங்களுக்கு மாத்திரம் விதிக்கப்பட்டிருந்த பணிப்பு, 20 ஆவது திருத்தத்தின் கீழ் அனைத்து ஊடகங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 19 ஆவது திருத்தத்தின் கீழ் எழுந்திருந்த தேர்தல் ஆணைக்குழுவின் கூட்ட நடப்பெண் பற்றிய பிரச்சினைக்கும் இந்த 20 ஆவது திருத்தத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் 2001 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவைத் தாபித்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டது. இதன் மூலம் உத்தேச ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை ஏழு (07) ஆகும். "தேர்தல் ஆணைக்குழு" புதிதாக தாபிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்ட ஒரு ஆணைக்குழுவாகும்.
ஆணைக்குழுக்களுக்கு அங்கத்தவர்களை நியமனம் செய்வதற்காக விஷேட வழிமுறையொன்று யாப்பின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது பதினோழாம் திருத்தத்தின் மூலம் நிறுவப்படவுள்ள "அரசியலமைப்பு சபை" மூலம் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய ஆணைக்குழுக்களுக்காக அங்கத்தவர்கள், தவிசாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படல் வேண்டும். அதற்கமைய அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின்றி சனாதிபதிக்கு ஆணைக்குழுக்களுக்கு எந்தவொரு நபரையும் நியமனம் செய்ய முடியாதென்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்படுகின்ற நபர்கள் சனாதிபதி அவர்களால் 14 நாட்களினுள் நியமனம் செய்யப்படவில்லையெனில், அவர்கள் நியமனம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படும்.
பதினேழாம் திருத்தத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவைத் தாபிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களை நியமனம் செய்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த சிக்கலான நிலைமையொன்றாகும். அதேபோன்று அரசியலமைப்பு சபை இரண்டாம் தடவை நியமனம் செய்தல் தொடர்பில் காணப்பட்ட சிக்கலான நிலைமை காரணமாகவும் தேர்தல் ஆணைக்குழு தாபிக்கப்படவில்லை.
பதினேழாம் திருத்தத்தின் கீழ் நியமனம செய்யப்படவிருந்த தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாகும். அதன் கூட்ட குறைநிறைவெண் மூன்றாகக் காணப்பட்டது. இருந்தபோதும் பதினெட்டாம் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு சபைக்குப் பதிலாக "பாராளுமன்ற சபை" என்ற பெயரில் சபையொன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்களை நியமனம் செய்வதற்காக தாபிக்கப்பட்டது. அதேபோன்று தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை மூன்று வரை குறைக்கப்பட்டது. இத்திருத்தங்களுக்கமைய பாராளுமன்ற சபையின் பரிந்துரையின்றி சனாதிபதிக்கு ஆணைக்குழு அங்கத்தவர்களை நியமனம் செய்ய முடியும்.
தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய ஆணைக்குழுக்களை தாபித்தல் தொடர்பாக சிவில் சமூகம் மற்றும் அரசியல் கட்சிகளிடையே காணப்பட்ட அழுத்தம் மற்றும் கோரிக்கைகள் அதிகரித்தமை போன்றே அதற்காக காட்டப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் பத்தொன்பதாவது திருத்தம் 2015 ஆம் ஆண்டில் புதிய திருத்தமொன்றாக சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் மூன்று பேராகும். இருப்பினும், மூன்று பேராகக் காணப்பட்ட குறைநிறைவெண் குறைக்கப்பட்டிருக்கவில்லை. ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக நியமனம் செய்யப்படுவதற்குத் தேவையான தகைமைகள் யாப்பின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொழில்;, நிருவாக மற்றும் கல்வி ஆகிய துறைகளில் விஷேடத்துவம் கொண்ட இரண்டு நபர்களும் மற்றும் பிரதித் தேர்தல் ஆணையாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியொன்றை வகித்த தேர்தல்கள் திணைக்களத்தின் இளைப்பாறிய ஒருவரும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக நியமனம் செய்யப்படல் வேண்டுமென்பதோடு, அவர்களிலிருந்து ஒருவர் சனாதிபதி அவர்களால் தவிசாளராக நியமனம் செய்யப்படல் வேண்டும். புதிய ஏற்பாடுகளின் கீழும் அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்படுகின்ற நபர்களை நியமனம் செய்யாதிருப்பதற்கு சனாபதிக்கு அவகாசமில்லை.
மேலும், பாராளுமன்றம் அல்லது மாகாண சபை உறுப்பினரொருவர், உள்ளூர் அதிகார சபை உறுப்பினரொருவர், நீதிமன்ற சேவையின் அலுவலரொருவர் அல்லது அரச அலுவலரொருவரை தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவரொருவராக நியமனம் செய்ய முடியாதென யாப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். பதிவிக் காலத்தினுள் அங்கத்தவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கெனில், உயர்நீதிமன்றத்தின் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியொருவரை பதவி நீக்கம் செய்வதற்கான செயலொழுங்கு முறைகளை இதற்காக பின்பற்றப்படுதல் வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தின் போது திணைக்களம் செயற்பாட்டில் காணப்பட்டதோடு, "தேர்தல்கள் திணைக்களம்" மற்றும் "தேர்தல்கள் ஆணையாளர்" என்ற வசனங்களுக்குப் பதிலாக "தேர்தல் ஆணைக்குழு" என்ற வசனம் பதிலீடு செய்யப்பட வேண்டுமென அரசியலமைப்பில் 49(3)(ஈ) இல் குறிப்பிடப்படுகின்ற கட்டளைக்கமைய 1955.10.01 ஆம் திகதி தொடக்கம் காணப்பட்டு வந்த தேர்தல்கள் திணைக்களம் 2015.11.17 ஆம் திகதியிலிருந்து இல்லாதொழிந்தது. "தேர்தல்கள் ஆணையாளர் பதவி" வசம் காணப்பட்ட தத்துவங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கையளிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களம் இல்லாதொழிந்ததைத் தொடர்ந்து அதன் தத்துவங்கள், பணிகள் பௌதீக மற்றும் மனித வளங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கையளிக்கப்படுகின்றது. அதற்கமைய தேர்தல் ஆணைக்குழு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட போதும் அதன் பணியாட் குழு அல்லது பௌதீக வளங்கள் தொடர்பாக குறிப்பான சிக்கலொன்று ஏற்படவில்லை. 15/1908/701/18 ஆம் இலக்க 2016.01.08 ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திர அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் தற்போதுள்ள தேர்தல் திணைக்களத்தின் கீழ் பணியிலீடுபட்டிருந்த பதவிநிலை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் மற்றும் சலுகைகள் சகிதம் இணைப்புச் செய்யப்பட்டனர்.
அரசியலமைப்பின் பதிமூன்றாம் திருத்தம் 103(2) உறுப்புரையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடாத்துதல் மற்றும் மக்கள் விருப்பம் கோடல்களை நடாத்துதல் தேர்தல் ஆணைக்குழுவின் நோக்கமாகவிருத்தல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் 104ஆ(1) உறுப்புரை மூலம் காணப்படுகின்ற தேர்தல் சட்டங்களுக்கமைய குறித்த தேர்தல்களை நடாத்துவதற்கும், வருடாந்த தேருநர் இடாப்பைத் தயாரிப்பதற்கும் ஆணைக்குழுவுக்கு தத்துவம் உள்ளதோடு, ஆணைக்குழுவின் அலுவல்கள் அத்தத்துவங்களுக்கும் பணிகளுக்கும் மட்டுப்படுத்தப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த சட்டத் திட்டங்களுக்கமைய தேர்தல்களை நடாத்தும் பொறுப்பு கையளிக்கப்பட்ட தேர்தல்கள் திணைக்களத்தை விட விஷேட பொறுப்பொன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடிப்படைச் சட்டத்திற்கு பத்தொன்பதாம் அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் விஷேட ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டுள்ளதால் ஆணைக்குழுவின் தத்துவம் மற்றும் பலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவை தாபிக்கும் போது ஆணைக்குழுவுக்கு விஷேட தத்துவங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 104(அ) உறுப்புரையின் கீழ் நீதிமன்ற தத்துவங்களுக்குட்பட்டு,
01. ஆணைக்குழுவின் தீர்மானங்கள், பணிப்புக்கள் அல்லது செயற்பாடுகள் இறுதியானதும் முடிவானதுமாயிருத்தல்.
02. தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக சிவில் வழக்கொன்று அல்லது வழக்கு நடவடிக்கையொன்று தொடுக்க முடியாதுள்ளமை.
ஆகிய விஷேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரம் வழங்கப்பட்டிருப்பது 126 ஆம் உறுப்புரையின் கீழ் அடிப்படை உரிமை மீறப்படல் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரம், 130 கீழ் சனாதிபதித் தேர்தல், தேர்தல் மனு என்பன தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரம், 144 இன் கீழ் உறுப்பினரொருவராக தேர்ந்தெடுக்கப்படல் தொடர்பான மனுவிசாரணைக்கான மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரங்களுக்கு உட்பட்டதாகவாகும்.
மேலும் தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சட்டத்தைச் செயல்வலுப்படுத்தல், பாதுகாத்தலுக்காகவுள்ள ஏற்பாடுகள், பாராளுமன்றத்திற்கு வருடாந்த நிருவாக/ தேர்தல் அறிக்கைகளை சமர்ப்பிப்பது தவிர வேறு பொறுப்புக்களுக்கு கட்டுப்படவில்லையென்பது விஷேட அதிகாரக் கையளிப்பொன்றாகும். இது தவிர அரச ஆதனங்கள் முறையற்ற பாவனை தொடர்பான விஷேட அதிகாரம் 104(ஆ)(4)(அ) இன் கீழ் வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் காலங்களின் போது அரச ஊடகங்கள் உள்ளிட்ட பொதுசன ஊடகங்களின் நடத்தை தொடர்பான ஊடக வழிகாட்டு நெறிகளை விதித்தல் மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளை விதித்தல் என்பவற்றிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்;று 104(இ) இன் கீழுள்ள பொலிஸ் அதிகாரமும் 104(ஈ) இன் கீழுள்ள இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்காக ஆணைக்குழுவுக்கு விஷேட அதிகாரமொன்றும் பதினேழாம் அரசியல் யாப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நோக்கும் போது தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது
01. ஆணைக்குழுவை நியமனம் செய்தல் தொடர்பான விஷேட ஏற்பாடுகள்;
02. தேர்தல்கள் அலுவல்கள் கையளிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு வேறு அரச பௌதீக மற்றும் மனித வளங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் ஏற்பாடுகள் ;
03. ஆணைக்குழுவின் தீரமானங்களிலுள்ள இறுதித் தன்மை மற்றும் வழக்கு அலுவல்களின் போது கிடைக்கப்பெறுகின்ற விஷேட விடுபாட்டுரிமை;
04. அரச சொத்துக்கள் கட்சிகள்/ வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்காக பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்வதற்குள்ள அதிகாரம் ;
05. தேர்தல் காலப்பகுதியினுள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடக வழிகாட்டு நெறிகளை விதிப்பதற்கான அதிகாரம் ;
06. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போது தேர்தல்களில் முறையற்ற செல்வாக்குகளை தவிர்ப்பதற்குள்ள சட்டங்கள் ;
07. நியாயமான தேர்தலொன்றுக்கு உசிதமான நிலைமையொன்றை உருவாக்குதல் சனாதிபதி அவர்களின் பொறுப்பொன்றாகக் கருதப்படுதல்.
மேற்படி விடயங்களுக்கமைய அவ்விஷேட தத்துவங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் அரசியலமைப்பினூடாக செய்யப்பட்டிருப்பதனூடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதன் பணிப்பொறுப்புக்களை ஆற்றிக் கொள்வதற்கும், தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மற்றும் முகாமைத்துவத்திற்கு தேவையான பலமும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகின்றது. ஆணைக்குழுவின் அவ்வதிகாரங்களை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கமைய அதன் நடைமுறை நிலைமை மற்றும் பெறுபேறுகளை மதிப்பீட்டுக் கொள்ள முடியும்.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு 104(உ) உறுப்புரை மூலம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமொருவரை நியமனம் செய்வதற்கான அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டளைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் அமைவாக செயற்பட வேண்டிய ஒரு நபராகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்;கு ஆணைக்குழுவின் ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு ஆணைக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரமுண்டு. தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் பதவிக் காலத்தினுள் பதவியிலிருந்து நீக்குதல் தொடர்பில் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமொன்றாகும். தேர்தல்கள் திணைக்களம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணையாளரின் பதவிக் காலம் 60 வயதாகக் காணப்பட்டது. இப்பதவிக் காலத்தை தேவைப்பாட்டிற்கமைய ஒரு வருட காலம் காலநீடிப்புச் செய்வதற்கும் அவகாசம் காணப்பட்டது. இருப்பினும், தேர்தல் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்படவுள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் வயது 65 வரை என்பதோடு, இவ்வயதிற்கு முன்னர் அவரை நீக்க முடிவது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அமைவாகவாகும். அதாவது இலங்கை அரசியலமைப்பின் 104(உ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய அவர் மரணமடைந்தால் அல்லது கேட்டு விலகினாலன்றி 65 வயது பூர்த்தியடையும் வரை உடலியல் அல்லது உளவியல் குறைபாடுகள் காரணமாக நீக்கினால் அல்லது முறைகேடு அல்லது குறைபாடு காரணமாக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற பத்திரமொன்றின் மூலம் அவரை நீக்கினாலன்றி பதவி வெற்றிடமாக மாட்டாது.
இந்நிலைமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல்கள் ஆணையாளரின் பதவிக்காலத்தை 60 வயது வரை குறைக்குமாறு அரசியலமைப்புச் சபைக்கு அறிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய அமைச்சரவையினால் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் பதவிக் காலத்தை 60 வயது வரை குறைப்பதை அனுமதித்து அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை செய்வதற்கு தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போதைய ஆணைக்குழு அவ்வாறான மேலுமொரு பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. அதாவது அரசியலமைப்பின் 104(1) உறுப்புரைக்கமைய தேர்தல் ஆணைக்குழுவின் கூட்ட குறைநிறைவெண் மூன்று பேரென விதிக்கப்பட்டுள்ளது. அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று என்பதன் காரணமாக முழு ஆணைக்குழுவும் தீர்மானமெடுப்பதற்காக ஒன்று கூடுதல் வேண்டும். பதினேழாம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய ஆணைக்குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாகக் காணப்பட்டது. அங்கு குறைநிறைவெண் மூன்றாகவிருந்தது. இருப்பினும். அங்கத்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு இசைவாக குறைநிறைவெண்; குறைக்கப்பட வேண்டியிருந்த போதும் அவ்வாறு செய்யப்படவில்லை.
இவ்விடயமும் அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பப்பட்ட பின்னர் குறை கூட்ட குறைநிறைவெண்ணை இரண்டாக குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையினால் அது தொடர்பிலும் திருத்தம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பில் குறித்த திருத்தங்கள் செய்யப்படும் வரை இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட மாட்டாது.
மேலே குறிப்பிடப்பட்ட அரசியமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்கள் (தவிசாளர்) சனாதிபதி சட்டத்தரணி திரு. என்.ஜே. நளீன் அபேசேகர அவர்கள் (அங்கத்தவர்), பேராசிரியர் எஸ். இரத்தினஜீவன் எச் ஹூல் அவர்கள் (அங்கத்தவர்) ஆகிய மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட முதலாவது ஆணைக்குழு நியமனம் செய்யப்பட்டது. 2015.11.13 ஆம் திகதி சனாதிபதி அவர்களால் நியமனம் செய்யப்பட்ட அவ்வங்கத்தவர்கள் 2015.11.17 ஆம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இதற்கமைய 2015.11.17 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.