எவ்வாறு வாக்களிப்பது
தனது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் ஆணையாளர் அனுமதித்த ஆளடையாள ஆவணங்களான செல்லுபடியான வெளிநாட்டு கடவூச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை அல்லது தேர்தல்கள் திணைக்களத்தினால் கிராம அலுவலர் ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமோர் ஆவணத்தை கட்டாயம் எடுத்துச் செல்லுதல் வேண்டும். மேலும் தனக்கு அஞ்சல் மூலம் கிடைக்கப்பெறுகின்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை (Poll Card) எடுத்துச் செல்லல் வாக்காளருக்குப் போலவே வாக்களிப்பு நிலைய பணியாட்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் அதனையும் எடுத்துச் செல்லவும். மேலும் வாக்கினைப் பிரயோகிக்கும் போது பின்வரும் நடைமுறையைப் பின்பற்றவும்.
இங்கு வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் நால்வர் பின்வருமாறு செயற்படுவார்கள்.
-
1
முதலில் உள்ள அலுவலர் வாக்காளர் வசமுள்ள ஆளடையாள ஆவணத்தை (தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், மதகுருமாருக்கான அடையாள அட்டை, அரசாங்க ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அல்லது கிராம அலுவலர் ஊடாக தேர்தல்கள் திணைக்களம் விநியோகித்த தற்காலிக அடையாள அட்டை) பரிசீலித்துப் பார்த்து அதிலுள்ள நிழற்படமும், நபரின் முகத்தோற்றமும் ஒத்திசையுமாயின் வாக்காளரை இரண்டாவதாகக் காணப்படுகின்ற அலுவலரிடம் ஆற்றுப்படுத்துவார்.
-
2
இரண்டாம் அலுவலர் வாக்காளர் வசமுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை (Official Poll Card) கேட்டு வாங்கி அவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் தேடிப்பிடித்து அவரிடம் அவரின் பெயரை விசாரித்து வாக்காளரின் பெயரையும் தொடர் இலக்கத்தையும் உரத்து மொழிவார். அதன் பின்னர் ஆட்சேபனை எதுவுமில்லையெனில் வாக்காளரை அடுத்து அமர்ந்துள்ள அலுவலரிடம் ஆற்றுப்படுத்துவார்.
-
3
மூன்றாம் அலுவலர் வாக்காளரின் இடதுகை சிறுவிரலை பரிசீலித்து மைபூசு கருவியொன்றின் மூலம் அவ்விரலை சுற்றி மை பூசுவார். விரலில் மையைப் பூசுவதற்கு இணங்காவிடத்து அத்தகைய வாக்காளர் ஒருவருக்கு வாக்கினை பிரயோகிக்க முடியாமற் போகக் கூடும். விரலை அடையாளமிட்டதன் பின்னர் அடுத்து அமர்ந்துள்ள அலுவலர் வாக்குச்சீட்டொன்றைத் தருவார்.
அதை எடுத்துக்கொண்டு வாக்கினை அடையாளமிடுவதற்காக மறைக்கப்பட்டுள்ள கூட்டிற்குள் சென்று வாக்குச்சீட்டில் தாம் விரும்பிய கட்சிக்கு அல்லது குழுவுக்கு வாக்கினை அடையாளமிட்டு, விரும்பின் வாக்குச்சீட்டின் கீழ்ப்பகுதியில் உள்ள வேட்பாளர்களின் இலக்கங்களின் ஊடாக சுட்டிக்காட்டப்படுகின்ற வேட்பாளர்களுக்கு அல்லது அதனிலும் குறைந்த தொகையினருக்கு விருப்பினை அடையாமிட்டு, வாக்குச்சீட்டை நன்றாக இரண்டாக மடித்து தேவைப்படின் நான்காக மடித்து வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டிக்குள் இடல்.