தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் செயலகம் . சரண மாவத்தை, இராஜகிரிய, 10107, ஶ்ரீ லங்கா
LOGO

எமது வரலாறு

அரச பிரிவுகளினால் ஆற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் பொதுச் சேவைகளை மேற்கொள்ளும் பொருட்டு திணைக்களங்கள், அமைச்சுக்கள், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் சுதந்திரத்திற்கு முன்னரைப் போன்றே சுதந்திரத்திற்குப் பின்னரும் தாபிக்கப்படுதல் வழமையான ஒரு செயற்பாடாகும். தேர்தல்கள் திணைக்களத்தின் உருவாக்கமும் அவ்வாறனதோர் சந்தர்ப்பமாகும். தேர்தல்கள் திணைக்களம் தாபிக்கப்படுவதற்கான அடிப்படைக் காரணம் தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், மற்றும் அதற்கான முகாமைத்துவ அலுவல்களை பேணிச் செல்லல் என்பனவாகும். அதாவது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை நடாத்துதல் மற்றும் அதற்குத் தேவையான வருடாந்த தேருநர் இடாப்புக்களைத் தயாரித்தல் உள்ளிட்ட நியதிச்சட்ட மற்றும் நியதிச்சட்டமல்லாத பணிகளைப் பேணிச் செல்வது திணைக்களத்தின் பிரதானமான பணிப்பொறுப்பாகும்.

தேர்தல்கள் திணைக்களம் 1955 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. அது ஒரே தடவையில் இடம்பெற்றதொன்றல்ல ஆதலால், திணைக்களம் தாபிக்கப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட நிலைமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பது அதன் வரலாற்றுப் பரவலாக்கம் மற்றும் ஒழுங்கு முறையான விருத்தி தொடர்பான புரிந்துணர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்குப் பெரிதும் உதவியாக அமையும்.

இலங்கையின் பிரதிநிதித்துவ சனநாயகத்தின் தோற்றம், 19 ஆம் நூற்றாண்டு வரை நீண்டு செல்கின்றது. தற்காலத்தைப் போன்றே தேர்தல் மற்றும் வாக்கெடுப்பு விரிவான விதத்தில் இடம்பெறவில்லையெனினும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அதாவது 1865 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்திற்கமைய கொழும்பு நகர சபையின் பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்து கொள்வதற்காக நடாத்தப்பட்ட தேர்தலின் போது இந்த நாட்டின் மக்களுக்கு முதற்தடவையாக வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் குறூ மக்கலம் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1911 ஆம் ஆண்டளவில் அப்போது காணப்பட்ட சட்ட சபையின் பரிந்துரையின் அடிப்படையில் 04 பிரதிநிதிகள் மட்டுப்படுத்தப்பட்ட வாக்கின் மூலம் இந்த நாட்டின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கமைய சட்ட சபைக்கு பொதுமக்களின் வாக்கினால் முகவர்கள் தேர்ந்தெடுத்தல் ஆரம்பமாகியது. அதாவது 1910 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குறூ மக்கலம் சீர்த்திருத்தத்தின் கீழ் சட்டசபையின் பிரதிநிதிகள் எண்ணிக்கை 21 வரை அதிகரிக்கப்பட்டதோடு, உத்தியோகப்பற்றுள்ளவர்கள் 11 மற்றும் உத்தியோகப்பற்றற்றவர்கள் 10 என்ற அடிப்படையில் சட்டசபை அங்கத்தவர்களை உள்ளடக்கியிருந்தது. அங்கு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களில் 04 பேர் அதாவது ஐரோப்பியர் (கிராமிய மற்றும் நகர) 02, பறங்கியர் 01 மற்றும் படித்த இலங்கையர் 01 என்ற அடிப்படையில் நான்கு பேர் 1911 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோல்புருக் மறுசீரமைப்பின் கீழ் ஆரம்பமாக 1833 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டசபை உத்தியோகப்பற்றுள்ளவர்கள் 09 மற்றும் உத்தியோகப்பற்றற்றவர் 06 என்ற அடிப்படையில் 15 (பதினைந்து) உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்த போதும் அச்சந்தர்ப்பத்தில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் நியமனம் செய்யப்படவில்லை. அங்கு உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்களாக ஐரோப்பியர் 03, சிங்களவர் 01, தமிழர் 01 மற்றும் பறங்கியர் 01 என்ற அடிப்படையில் 06 உறுப்பினர்கள் தேசாதிபதியால் பெயர் குறிக்கப்பட்டனர்.

மெனிங் டெவன்சியர் மறுசீரமைப்பின் கீழ் 1920 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சட்டசபை 37 உறுப்பினர்களை கொண்டிருந்தது. அதில் 14 உத்தியோகப்பற்றுள்ள அங்கத்தவர்களையும் மற்றும் 23 உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களையும் உள்ளடக்கியிருந்து. உத்தியோகப்பற்றற்ற 05 பேர் வாக்கெடுப்புப் பிரிவு அடிப்படையில் வாக்கெடுப்பின் மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.

1923 அரசுப் பேரவையின் கீழ் 1924 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சட்டசபைக்கு 49 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் உத்தியோகப்பற்றுள்ள உறுப்பினர்கள் 12 பேரையும், உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர்கள் 37 பேரையும் உள்ளடக்கிக் காணப்பட்டது. உத்தியோகப்பற்றற்றவர்களில் 23 பேர் மாகாண (அடிப்படையில்) வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேற்குறித்த தகவல்களுக்கமைய 1910 - 1930 வரையான காலப்பகுதியினுள் 03 தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளதோடு, அத்தேர்தல்களை நடாத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் 03 யாப்புக்களின் மூலம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது,

1. 1910 சட்டசபை கட்டளைச் சட்டம்

2. 1920 இலங்கை (அரசுப் பேரவை) கட்டளை

3. 1923 இலங்கை (அரசுப் பேரவை) கட்டளை

இத்தேர்தல்களின் போது உறுப்பினர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இவ்வுறுப்பினர்களை வாக்கின் மூலம் நியமனம் செய்யும் போது தற்போதுள்ளதைப் போன்று எல்லை நிருணய ஆணைக்குழுவினால் தேர்தல் மாவட்டங்கள் வேறு பிரிக்கப்படவில்லை. அதற்காக கிழே காட்டப்பட்டுள்ள நிபந்தனைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அங்கு காணியின் அளவு அல்லது சனத்தொகை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவில்லையென்பது தெரிய வருகின்றது.

1. நிருவாக காணி அலகுகளைப் பயன்படுத்திக் கொள்ளல்.

      உ-ம் அப்போது காணப்பட்ட மாகாண அல்லது வருமான மாவட்டம்

2. மக்கள் பிரிவுகளுக்கமைய வேறு பிரித்தல்.

               உ-ம் ஐரோப்பியர் (கிராமிய), ஐரோப்பியர் (நகர), பறங்கியர் என்ற அடிப்படையில்

3. சிங்களம் மற்றும் தமிழ் பிரிவுகள் அடிப்படையில் (பிற்காலத்தில்)

4. தொழில் அடிப்படையில் உ-ம் வர்த்தக சபை அங்கத்தவர்/ உற்பத்திச் சங்க அங்கத்தவர் என்ற அடிப்படையில்

இக்காலப்பகுதியினுள் தேருநர்களின் தகைமைகளாகப் பல்வேறு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதற்கமைய,

1. இனங்களுக்கமைய வாக்கெடுப்பு மாவட்டங்களை ஏற்படுத்துதல் மூலம் இன வாக்குரிமை கிடைக்கப்பெறுவதற்கு தகைமையொன்றாக காணப்பட்டது.

2.மொழியறிவின் அடிப்படையில் வாக்குரிமை கிடைக்கப்பெறல். இங்கு ஆங்கில மொழி அறிவு இருத்தல் வாக்குரிமை கிடைக்கப்பெறுவதற்கான தகைமையொன்றாகக் கொள்ளப்பட்டுள்ளது.

3. வதிவுக்கமைய தகைமை கிடைக்கப்பெறல். இதன் கீழ் ஒவ்வொரு வருடமும் யூன் மாதம் 01 ஆம் திகதிக்கு ஒரு வருடம் அப்பிரதேசத்தில் வதிந்திருத்தல் அவசியமென்பதோடு, அதில் இறுதி ஆறு மாதங்கள் தொடர்ச்சியான வதிவைக் கொண்டிருத்தல் கட்டாயமாகும்.

4. சொத்துக்கள் மற்றும் வருமானம்

உதாரணமாக வருடாந்த வருமானம் 600 ரூபா இருத்தல் வேண்டுமென்பதோடு, 1500 ரூபா ஆதனமொன்றுஃ அசையாச் சொத்தொன்று இருத்தல் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

வாக்காளர்களுக்கு தகைமை போன்றே தகைமையீனங்களும் விதிக்கப்பட்டிருந்தமை விஷேடமாகும்.  அதற்கமைய 21 வயதிற்கு குறைந்திருத்தல், பெண் பால்நிலை, உளச் சுகாதார நிலைமை பாதிப்படைந்திருத்தல், சிறைத் தண்டனை பெற்றிருத்தல் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் வாக்குரிமை இழக்கச் செய்யப்பட்டிருந்தது.

 

வேட்பாளர்  தகைமைகள்.

வேட்பாளர்கள் தேருநர்களாகப் பதிவுச் செய்யப்பட்டிருத்தல் மாத்திரம் போதுமானதாக காணப்படவில்லை. வேட்பாளரொருவராவதற்கான தகைமையீனங்கள் இருக்கக் கூடாதென்பதோடு, வதிவுக் காலம் மூன்று ஆண்டுகள் காணப்படுதல், மூன்று வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை பெற்றிராதிருத்தல் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டன. அதேபோன்று 25 வயதிற்குக் குறைவாகயிருத்தல், அரச சேவையிலீடுபட்டுள்ள அல்லது அரச சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவராக இருத்தல் தகைமையீனங்களுக்குட்படுவதில் தாக்கம் செலுத்தியுள்ளது. வருமான நிலைமையும் 1920 ஆம் ஆண்டின் கட்டளைச் சட்டத்தின் 13(2) ஆம் பிரிவின் கீழ் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

தற்காலத்தைப் போன்றே அக்காலப்பகுதியிலும் தேருநர் இடாப்புத் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்போதைய பிரதம நிருவாகியான தேசாதிபதியால் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதோடு, அப்பதிவு அலுவலர்களினால் தேருநர் இடாப்புத் தயாரிக்கப்பட்டது. அரசாங்கத்தின் முகவர்கள், உதவி முகவர்கள், வருமானக் கட்டுப்பாட்டாளர் போன்ற பதவிகளை வகிப்போர். பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இவ்வனைத்து அலுவல்களும் நிருவாகம் மற்றும் முகாமைத்துவம் செய்தல் தேசாதிபதியின் கட்டளைக்கமைய மேற்கொள்ளப்பட்டன. அவரினால் தெரிவத்தாட்சி அலுவலர்கள், வாக்கெடுப்பு நிலைய சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் போன்ற பணியாட் குழுவினரை தேர்ந்தெடுத்தல் மற்றும் நியமனம் செய்தல் என்பவற்றிற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. தெரிவத்தாட்சி அலுவலரினால் வாக்கெடுப்பை நடாத்துதல் பெறுபேறுகளை வெளியிடல் மற்றும் ஏனைய அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர தேர்தல் தவறுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமொன்றாகும்.

டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931 இலங்கை (அரசுப் பேரவை) கட்டளைச் சட்டத்திற்கமைய அரசுப் பேரவை தாபிக்கப்பட்டது. அரச மந்திரி சபைக்கு முகவர்களை நியமனம் செய்வதற்காக 1931 இலங்கை (அரசுப் பேரவை) தேர்தல்கள் கட்டளைச் சட்டத்திற்கமைய நடவடிக்கையெடுக்கப்பட்டது. 1931 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் இதற்காக இரண்டு தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலக மகாயுத்தம் காரணமாக அடுத்த தேர்தல் நடாத்தப்படவில்லை. அதற்கமைய இரண்டாம் அரச மந்திரி சபையின் பதவிக்காலம் 11 வருடங்கள் வரை காலநீடிப்புச் செய்யப்பட்டு பேணப்பட்டு வந்துள்ளதாக தெரிகின்றது.

1930 ஆம் ஆண்டில் சேதாதிபதியினால் எல்லை நிருணயக் குழுவொன்று நியமனம் செய்யப்பட்டதோடு. மாகாண அடிப்படையில் 50 தேர்தல் மாவட்டங்கள் ஆணைக்குழுவினால் வேறு பிரிக்கப்பட்டது. இங்கு சனத்தொகை 100,000 - 125,000 இடைப்பட்ட தொகைக்கு ஒரு உறுப்பினர் என்ற விதத்தில் நியமனம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதற்கமைய தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மாகாண அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

வடமாகாணம் - 05
மத்திய மாகாணம் - 08
சப்பிரகமுவ மாகாணம் - 05
வடமத்திய மாகாணம் - 01
கிழக்கு மாகாணம் - 02
தென் மாகாணம் - 07
வடமேல் மாகாணம் - 05
மேல் மாகாணம் - 14
ஊவா மாகாணம் - 03

என்ற அடிப்படையில் 50 மாவட்டங்கள் வேறுப்பிரிக்கப்பட்டுள்ளன.

டொனமூர் மறுசீரமைப்பின் கீழும் தேசாதிபதியால் நியமனம் செய்யப்பட்ட பதிவு அலுவலர்களினால் தேருநர் இடாப்புத் தயாரித்தல் அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதன் கீழ் தேருநர்கள் பதிவு செய்யப்பட்டனர். டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது. சர்வசன வாக்குரிமை என்பது குறித்த வயதெல்லைக்கு மேற்பட்ட நியதிச் சட்ட தகைமையீனங்களுக்குட்படாத அனைத்து பிரசைகளுக்கும் வேறுபாடின்றி தமது வாக்கை பயன்படுத்துவதற்குள்ள உரிமையெனக் குறிப்பிட முடியும். இதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் புதிய தேர்தல் செயற்பாடுகளுக்குத் தேவையான சட்டங்கள் மற்றும் முகாமைத்துவ ஏற்பாடுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. தேர்தல் செயற்பாடுகள் தேசாதிபதியின் அறிவுறுத்தல் மற்றும் கட்டளைகளின் அடிப்படையில் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் முன்னரைப் போன்றே மேற்கொள்ளப்பட்டன.

1931 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்குச் சீட்டுக்களில் கட்சி அடையாளங்கள் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக ஒவ்வொரு வேட்பாளர் சார்பாகவும் வெவ்வேறு நிறங்களைக் கொண்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டமையும் வாக்காளருக்கு வாக்குச் சீட்டை தனக்கு விருப்பமான வேட்பாளரின்/ கட்சியின் நிறம் கொண்ட பெட்டியில் ஈடுவதன் மூலம் தமது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் செய்து கொடுக்கப்பட்டமையும் விஷேட அம்சமொன்றாகும். சர்வசன வாக்குரிமை கிடைக்கப்பெற்றுள்ளமையால் 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமைக் கிடைக்கப்பெற்றமை முன்னரைப் போன்று படிப்பறிவு வாக்காளரொருவராவதற்குத் தேவையான விஷேட தகைமையொன்றாக இல்லாமல் செய்யப்பட்டமை காரணமாக புதிதாக ஒன்று சேர்கின்ற பெரும் எண்ணிக்கையானோரின் வாசிப்புதிறன் தொடர்பான பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வொன்றாக அமைந்திருக்க முடியும்.

1946 ஆம் ஆண்டின் இலங்கை (பாராளுமன்றத் தேர்தல்) அரசுப் பேரவை கட்டளைச் சட்டம் மற்றும் 1946 ஆம் ஆண்டின் உள்ளூர் அதிகார சபைகள் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்காகப் பாராளுமன்றத் தேர்தல்கள் திணைக்களம் ஆணையாளரொருவரின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உள்ளூராட்சி (பிரதேச சபை) நிறுவன தேர்தல்களுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திணைக்களம் இன்னொரு ஆணையாளரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கமைய 1947 - 1955 ஒக்தோபர் வரை இரண்டு திணைக்களங்கள் இரண்டு ஆணையாளர்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 1947 ஆம் ஆண்டு முதலாவது பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 1952 ஆம் ஆண்டு இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் என்பன பாராளுமன்றத் தேர்தல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திணைக்களத்தினால் குறித்த காலப்பகுதியினுள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் நடாத்தப்பட்டன.

தேர்தல்கள் திணைக்களம் 1955 ஒக்தோபர் மாதம் 01 ஆம் திகதி நிறுவப்பட்டது. அது வரை காணப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் உள்ள+ராட்சி மன்றத் தேர்தல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைக்கப்பட்டு தேர்தல்கள் திணைக்களம் தாபிக்கப்பட்டது. அதன் தலைவர்  தேர்தல்கள் ஆணையாளராவார்.

தற்போதைய வரைவிலக்கணத்திற்கமைய இறைமை மற்றும் சனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள், வாக்கெடுப்புக்கள் மற்றும் மக்கள் விருப்பம் கோரல் என்பவற்றை நடாத்துதல், அதற்குத் தேவையான தேருநர் இடாப்பைத் தயாரித்தல்  தேர்தல்கள் திணைக்களத்தின் நோக்கும் மற்றும் பொறுப்புமாகும். இப்பொறுப்புக்களை ஆற்றிக் கொள்வதற்காக தேர்தல்கள் ஆணையாளருக்கும், தேர்தல்கள் திணைக்களத்திற்கும் வேறு அரச நிறுவனங்களுக்கு இல்லாத விஷேட சுயாதீனத்துவம் முன்பிருந்தே கிடைக்கப்பெற்றிருந்தது.

தேர்தல்கள் திணைக்களம் எந்தவொரு அமைச்சின் கீழும் உட்படாமை, தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியின்றி அலுவலர்களை திணைக்களத்திற்கு எடுத்தல் அல்லது திணைக்களத்திலிருந்து வெளியே அனுப்புதல் மேற்கொள்ள முடியாமை, சுயாதீனமாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பமளித்தல் மற்றும் திணைக்களத்திற்கு செல்வாக்குச் செலுத்தாமை காரணமாக அதன் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றத்திற்கு மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டியுள்ளமை போன்ற காரணங்கள் தேர்தல் திணைக்களம் வேறு அரச நிறுவனங்களை விட சுயாதீனமாக செயற்படுவது தொடர்பான உதாரணங்களாகும்.

அதற்கமைய நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை நடாத்துதல், தகைமையுடைய அனைத்து பிரசைகளையும் வாக்காளர்களாக வருடாந்தம் தேருநர் இடாப்பில் பதிவு செய்தல், தகைமையற்ற நபர்கள் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக பிரசைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையெடுத்தல் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதானமான பணிகளாகும்.

அதே போன்று அரசியலமைப்பினால் விதிக்கப்படுகின்ற சனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நேரடியாக மக்களின் விருப்பத்தை விசாரிக்க வேண்டிய சந்தர்;ப்பங்களின் போது மக்கள் விருப்பம் கோடல், மாகாண சபைகள் மற்றும் உள்ள+ராட்சி சபைத் தேர்தல்கள் என்பவற்றை நீதியாகவும் சுதந்திரமாகவும் விசுவாசமாகவும் நடாத்துவது தேர்தல்கள் திணைக்களத்திற்குரிய மேலுமொரு முக்கிய பொறுப்பாகும்.

இதற்கமைய தேர்தல்கள் திணைக்களத்திற்குரிய பணிப்பொறுப்புக்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிட முடியும்.

(அ).     வருடாந்த தேருநர் இடாப்பைத் தயாரித்தலும் அத்தாட்சிப்படுத்தலும்.

(ஆ)     தேசிய மட்டத்தில் நடாத்தப்பட வேண்டிய,

1. சனாதிபதித் தேர்தல்

2. பாராளுமன்ற பொதுத் தேர்தல்

3. மக்கள் தீர்ப்பு

(இ)      மாகாண மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் நடாத்தப்பட வேண்டிய,

1. மாகாண சபைத் தேர்தல்கள்

2. மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைத் தேர்தல்களை நடாத்துதல்.

இவ்வனைத்துத் தேர்தல்கள் மற்றும் தேர்தல்களை நடாத்துவதற்கான இலங்கை சனநாயப சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ஒவ்வொரு தேர்தல்களுக்காகவும் விஷேட சட்டங்கள் மூலம் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு

I.    1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம்

II.   1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் விருப்பம்கோடல் சட்டம்

III.  1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டம்

IV.   1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம்

V.    1980 ஆம் ஆண்டின் பிரதேச சபைகள் சட்டம்

VI.   1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க உள்ளூரதிகார சபைகள் தேர்தல்கள் சட்டம்

VII. 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களைப் பதிவு செய்தல் சட்டம்

இத்தேர்தல் சட்டங்களுக்கு மேலதிக 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அபிவிருத்தி சபைகள் சட்டத்திற்கமைய 1981.03.25 ஆம் திகதிய 137/07 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாபிக்கப்பட்ட 24 அபிவிருத்தி சபைகளுக்காக வர்த்தமானி அறிவித்தலுக்கமைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 1981.06.04 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

இந்த ஒவ்வொரு சட்டத்தின் மூலமும் குறித்த தேர்தலுக்குரிய தேர்தல் செயற்பாடுகளுக்கான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் வேட்புமனுக்களைக் கையேற்றல், தேர்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல், தேர்தல் தவறுகள் மற்றும் சட்ட முரணான செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நிருவாக மற்றும் முகாமைத்துவ அலுவல்கள் தேர்தல்கள் ஆணையாளரின் கட்டளைக்கமைய மேற்கொள்ளப்படும்.

தேர்தல்கள் திணைக்களம் 1955 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் காணப்பட்ட சட்ட ஏற்பாடுகள் நடாத்தப்பட வேண்டிய தேர்தல்கள் மற்றும் அத்தேர்தல்களை நடாத்தும் போது பின்பற்றியொழுக வேண்டிய வழிமுறைகள் நிருவாக செயற்பாடுகள் அவ்வப்போது மாற்றமடைந்துள்ளன அதற்கமைய தேர்தல்கள் திணைக்களத்தில் பணியாற்றிய ஆணையாளர்களின் பதவிக் காலத்தோடு, அம்மாற்றங்களையும் குறிப்பிடுவது பொருத்தமாகும். தேர்தல் ஆணைக்குழு தாபிக்கப்படும் வரை ஆறு (06) ஆணையாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

திரு. ஏ. அருள்பிரகாசம் - 1955.10.01 - 1957.03.06

தேர்தல்கள் திணைக்களத்தின் முதலாவது ஆணையாளராக நியமனம் செய்யப்பட்ட திரு. ஏ. அருள்பிரகாசம் அவர்கள் இப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல்கள் ஆணையாளராக பதவி வகித்தவராவார். இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் இவரது காலப்பகுதியிலேயே நடாத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற விஷேட நிகழ்வுகளில் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.

  1. 1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துதல் - இத்தேர்தல் மூன்று தினங்களினுள் நடாத்தப்பட்டது.

  2. தேருநர்களைக் கணக்கெடுக்கும் படிவம் (பிசீ படிவம்) வீட்டுத் தலைவரினால் கையொப்பமிட்டு கையளிக்கும முறை ஆரம்பிக்கப்படல்.

  3. அதுவரை அகர வரிசையின் தயாரிக்கப்பட்ட தேருநர் இடாப்பு வீட்டிலக்கங்களின் தொடரொழுங்கில் தயாரிக்கப்படல்.

 

திரு. ஈ.எப். டயஸ் அபேசிங்க - 1957.03.07 - 1978.03.15

திரு. ஈ.எப். டயஸ் அபேசிங்க அவர்கள் 1957.03.07 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். திரு. ஏ. அருள்பிரகாசம் அவர்கள் இளைப்பாறியதைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாகியது. மிக நீண்ட காலமாகச் சேவையாற்றிய திரு. அபேசிங்க அவர்கள் 1978.03.15 ஆம் திகதி சேவையிலிருந்து இளைப்பாறினார். இவருடைய காலப்பகுதி தேர்தல்கள் திணைக்களத்தில் விஷேட நிகழ்வுகள் பல இடம்பெற்ற காலமொன்றாகக் கருதப்படுகின்றது. அதேபோன்று தேர்தல் தொடர்பில் விஷேட சட்டத் திட்டங்களும் புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யப்பட்ட காலமொன்றாகக் குறிப்பிட முடியும்.

தேர்தல்கள் திணைக்களத்தின் அலுவல்கள் ஆரம்ப சந்தர்ப்பத்திலிருந்து ஒழுங்கு முறையில் விரித்தியடைந்து வந்துள்ளமை காணக்கிடைக்கின்ற விஷேட இலட்சணமொன்றாகும். அதற்கமைய நிறுவனத் தலைவர் என்ற அடிப்படையில் தேவையான சட்டப் பின்னணிகள் மற்றும் தேர்தல்கள் முகாமைத்துவம் என்பவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு அவர் செயற்பட்டுள்ளதைக் காண முடியும்.

  1. பாராளுமன்றத் தேர்தலை ஒரு தினத்தினுள் நடாத்துவதை ஆரம்பித்தமை (1960 ஆம் ஆண்டு மார்ச் மாத தேர்தல்) அதற்கு முன்னர் 1947 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 19 நாட்களினுள் நடாத்தப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் 04 நாட்களுக்குள்ளும் 1956 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் 03 தினங்களினுள்ளும் நடாத்தப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய தேர்தலை ஒரு தினத்தினுள் நடாத்துவதை ஆரம்பித்தமை விஷேட அம்சமாகும். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் இதுவரை நடாத்தப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்றத் தேர்தல்கள், மக்கள் விருப்பம் கோடல் ஒரு நாளினுள் நடாத்தப்பட்ட தேர்தல்களாக நடாத்தப்பட்டுள்ளன.

  2. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முறைமையை அறிமுகம் செய்தல்.

  3. தேருநர்களுக்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை அனுப்பி வைத்தல் மற்றும் வாக்கெடுப்புத் தினம், வாக்கெடுப்பு நிலையம், பதிவுத் தொடர் இலக்கம் மற்றும் வாக்களிக்க முடியுமான காலம் ஆகிய தகவல்கள் இவ்வாக்காளர் அட்டை மூலம் வாக்காளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

  4. அத்தியவசிய சேவைகளிலீடுபடுகின்ற நபர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.

  5. 1960 மார்ச் மாதம் தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை 05 பொதுத் தேர்தல்கள் மற்றும் உள்ள+ரதிகார சபைத் தேர்தல்கள் பலவற்றையும் நடாத்துதல்.

  6. 1972 ஆம் ஆண்டின் இலங்கை குடியரசு யாப்பு நிறைவேற்றப்;படல் இதன் கீழ் தேசாதிபதிக்குப் பதிலாக பெயரளவு சனாதிபதியொருவரை நியமனம் செய்தல், பாராளுமன்றத்திற்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவையை ஸ்தாபித்தல் மந்திரி சபையை இல்லாதொழித்தல் போன்ற மாற்றங்களோடு அதற்கேற்றவாறு தேர்தல்கள் திணைக்களத்தின் சட்டங்கள் உள்ளிட்ட மாற்றங்களை ஏற்படுத்துதல் தேசிய அரசுப் பேரவையின் பதவிக்காலம் 06 வருடங்களாக அதிகரிக்கப்பட்டது.

 

திரு. எம்.ஏ. பியசேகர - 1978.03.16 - 1982.01.31

திரு. எம்.ஏ. பியசேகர அவர்கள் உதவித் தேர்தல்கள் ஆணையாளராக, பிரதித் தேர்தல்கள் ஆணையாளராக பணியாற்றியதன் பின்னர் 1978.03.16 ஆம் திகதி ஆணையாளர் பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இக்காலப்பகுதியினுள் தேர்தல்கள் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நிகழ்வுகளாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும்.

  1. 1978 ஆம் ஆண்டு; இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் யாப்பு நிறைவேற்றப்படல் இதன் கீழ் புதிதாக சனாதிபதித் தேர்தல், மக்கள் விருப்பம் கோடல் போன்ற தேர்தல் முறைகளை அறிமுகம் செய்யப்படல்.

  2. வாக்களிக்கும் போது கட்சிக்கு ஒரு வாக்கும் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கும் தெரிவிக்கும் புதிய முறைமை அறிமுகம் செய்யப்படல்.

  3. 1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அபிவிருத்தி சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதனூடாக புதிய உள்ளூரதிகார சபை நிறுவனங்கள் குறிப்பாக மாவட்ட மட்டத்தில் நிறுவுதல் மற்றும் அதற்கான தேர்தல்களை நடாத்துதல்.

  4. 1981 ஆம் ஆண்டில் அபிவிருத்தி சபை முதலாவது தேர்தலை நடாத்துதல் என்பவற்றைக் குறிப்பிட முடியும்.

தேர்தல்கள் ஆணையாளர் திரு. பியசேகர அவர்கள் இளைப்பாறியதன் பின்னர் மிக குறுகியதொரு காலம் பதில்கடமை தேர்தல்கள் ஆணையாளர்களாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. எல்.ஏ.ஜீ. ஜயசேகர 1982.02.01 - 1982.03.24 வரை மற்றும் சனாதிபதியின் மேலதிக செயலாளரான திரு. எஸ்.எல். மரிக்கார் அவர்கள் 1982.03.25 - 1982.05.03 ஆம் திகதி வரை நியமனம் செய்யப்பட்டனர்.

 

திரு. ஆர்.கே. சந்திரானந்த த சில்வா - 1982.05.04 - 1995.02.18

திரு. ஆர்.கே. சந்திரானந்த த சில்வா அவர்கள் 1982.05.04 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் உதவித் தேர்தல்கள் ஆணையாளராக தேர்தல்கள் திணைக்களத்தில் பணியாற்றியிருந்தார்.

இக்காலம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு மிகவும் வேலைபளுமிக்க காலப்பகுதியொன்றாகவிருந்தது. நாட்டில் அரசியல் ரீதியாக காணப்பட்ட சிக்கலான நிலைமைப் போன்றே வன்முறை யுகமொன்று காணப்பட்டமை காரணமாக தேர்தல் அலுவல்களை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கலான நிலைமைகள் காணப்பட்டன.

இக்காலப்பகுதியினுள் புதிய தேர்தல்கள் செயலக அலுவலகமொன்று நிருமாணிக்ப்பட்டமை காரணமாக இதுவரை வாடகை அடிப்படையில் அலுவலக இடவசதிகளைப் பெற்றுக் கொள்ளல் முற்றுப் பெற்றது.

  1. முதலாவது மக்கள் விருப்பம் கோடலை நடாத்துதல் (புதிய மக்கள் விருப்பம் கோடல் சட்டத்தின் கீழ்)

  2. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் நிறைவேற்றப்படல் மற்றும் பிரதேச சபைத் தேர்தல்கள் சட்டம் நிறைவேற்றப்படல்.

  3. 1988 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க உள்ள+ர் அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்படல் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் முதலாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்துதல் மாகாண சபைத் தேர்தலின் போது விருப்பு வாக்கு முறையை புதிதாக அறிமுகம் செய்தல்.

  4. முதலாலது சனாதிபதித் தேர்தலை நடாத்துதல் (சனாதிபதித் தேர்தல்கள் சட்டம்)

  5. பதிமூன்றாம் அரசியமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படல் மற்றும் அதனோடு தொடர்புடையதாக மாகாண சபைத் தேர்தல் ஆரம்பிக்கப்படல்.

  6. 1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துதல் இத்தேர்தல் விகிதாசார பிரதிநித்துவ முறை மற்றும் விருப்பு வாக்கு முறை என்பவற்றின் கீழ் நடாத்தப்பட்டது.

  7. இரண்டாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்துதல்.

  8. இரண்டாவது சனாதிபதித் தேர்தலை நடாத்துதல்.

  9. 1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துதல் உள்ளிட்ட பல தேர்தல்கள் இக்காலப்பகுதியினுள் நடாத்தப்பட்டன.

 

திரு. தயானந்த திசாநாயக்க - 1995.02.18 - 2011.03.26

பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவிருந்த திரு. தயானந்த திசாநாயக்க அவர்கள் 1995.02.18 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார்.

2000, 2004 பாராளுமன்றத் தேர்தல்கள், 2005, 2010 சனாதிபதித் தேர்தல்கள் மற்றும் ஏராளமான உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் இவரது காலப்பகுதியில் நடாத்தப்பட்டன.

பதினேழாவது அரசிலமைப்புத் திருத்தத்தின் மூலம் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் பதவிகளுக்குப் பதிலாக தேர்தல் ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்காகச் சட்ட ஏற்பாடுகளைச் செய்தல் இதற்கமைய ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு அரசியலமைப்பின் மூலம் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தேர்தல் ஆணைக்குழு தாபிக்கப்படும் வரை பதவி வகிக்க வேண்டியிருந்தமையினால் ஆகக் கூடுதலான காலமொன்று அப்பதவியில் இருக்க நேரிட்டது. 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினால் அச்சட்ட ஏற்பாடு நீக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2011.03.25 ஆந் திகதியின் பின்னர்  திரு. திசாநாயக்க அவர்கள் ஓய்வு பெறக்கூடியதாக ்இருந்தது.

 

திரு. மஹிந்த தேசப்பிரிய - 2011.03.26 - 2015.11.16

2011.03.26 ஆம் திகதி ஆறாவது தேர்தல்கள் ஆணையாளராக திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். 1983 ஆம் ஆண்டிலிருந்து உதவித் தேர்தல்கள் ஆணையாளராக பிரதித் தேர்தல்கள் ஆணையாளராக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளராக பணியாற்றிய அவர் மிக நீண்ட காலம் திணைக்களத்தில் தொடர்ச்சியாக பணியாற்றிய ஒருவராவார். அதேபோன்று திணைக்களத்தின் இறுதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. மஹிந்த தேசப்பிரிய அவர்களென்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்காலப்பகுதியினுள் பல புதிய அம்சங்கள் மற்றும் விஷேட செயற்பாடுகள் தேர்தல்கள் திணைக்களத்தின் பணிப்பொறுப்புக்களின் கீழ் ஒன்று சேர்க்கப்பட்டன.

  1. தேர்தல்களை நடாத்தும் போது பொலிஸாரை செயற்பாட்டு அடிப்படையில் அவ்வலுவல்களிலீடுபடுத்துவதன் மூலம் தேர்தல் தவறுகளையும், சட்டமுரணான செயற்பாடுகளையும் குறைத்துக் கொள்ளல்.

  2. ஒரு வருடம் பூராக மேற்கொள்ளப்பட்ட தேருநர் இடாப்பு மீளாய்வு மற்றும் அத்தாட்சிப்படுத்தலை ஆறு மாத காலப்பகுதியினுள் நிறைவு செய்தல்.

  3. தேர்தல் முறைப்பாட்டு விசாரணைக்கான புதிய நிகழ்ச்சித் திட்டமொன்றை தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தல்.

  4. "தேருநர்களின் தினமாக" யூன் மாதம் 01 ஆம் திகதியைப் பிரகடனம் செய்தமை.

  5. தேருநர்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை நாடு தழுவிய அடிப்படையில் நடைமுறைப்படுத்தல்.

  6. தெற்காசிய தேர்தல்கள் அதிகாரிகளின் சங்கத்தின் "தலைவர் பதவி" இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றமை

  7. தேர்தல்கள் திணைக்களத்தின் 60 வருட பூர்த்தி விழா கொண்டாடப்பட்டமை.

  8. சனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பல இக்காலப்பகுதியினுள் நடாத்தப்பட்டமை.

  9. பத்தொன்பதாவது யாப்புத் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழு தாபிக்கப்படுவதற்காகப் புதிய சட்ட ஏற்பாடுகள் இக்காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டது. அதன் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தவிசாளர் உள்ளிட்ட மூன்று அங்கத்தவர்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சனாதிபதி அவர்களால் 2015 நவம்பர் 13 ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டார். அதற்கமைய 2015 நவம்பர் 17 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்கள் தமது கடமைகளை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு தாபிக்கப்பட்டதோடு, தேர்தல்கள் திணைக்களம் தனது 60 ஆவது வயதில் இல்லாதொழிந்தது.

 

சட்டத்தரணி நிமல் ஜீ.புஞ்சிஹேவா அவர்கள் - தவிசாளர், தேர்தல் ஆணைக்குழு

1976 ஆம் ஆண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்று 1979 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற சட்டத்தரணியொருவராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். நிமல் ஜீ.புஞ்சிஹேவா அவர்கள் அதனைத் தொடர்ந்து உள்ளுராட்சி சேவையில் இணைந்து கடுவலை கிராம சபையின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அதனைத்தொடர்ந்து கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் உறுப்பினர், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர், தொழிற்பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர், தேசிய கைத்தொழில் மற்றும் பயிற்சி அதிகாரசபையின் உப தவிசாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்திட்டப் பணிப்பாளர், நிருவாக மற்றும் நிதிப் பணிப்பாளர், மேலதிக செயலாளர் (சட்டம்) முதலிய பதவிகளை வகித்து காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தவிசாளராகவும் பணியாற்றினார்.

சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை சார்ந்த ஏராளமான நூல்களையும் எழுத்தாவணங்களையும் வெளியிட்டுள்ள அவர், அரச மற்றும் அரச சார்பற்ற ஏராளமான அமைப்புகளின் பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயலமர்வுகளிலும் கருத்தரங்குகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதி வரை தேர்தல் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அக்காலப்பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவசியமான சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தேர்தல்கள் மற்றும் தேருநர்களின் பதிவு பற்றிய சட்ட மறுசீரமைப்புக்கு அவசியமான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கும் தனது முனைப்பான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார்.